மேற்கு மண்டலம்
நவம்பர் 6 போஜ்புரி 1 கோட்டத்தில் வேதம் வாசிக்கும் பழக்கத்தை விசுவாசிகள் மத்தியில் ஊக்குவிக்கவும் மற்றும் வேதத்தின் மீதுள்ள ஆர்வத்தினைப் பெருக்கவும் நடைபெற்ற வேதாகம வினாடி வினாப் போட்டியில், பணித்தள விசுவாசிகள் 300 பேர் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். விசுவாசிகளின் குடும்பத்திற்காகவும் மற்றும் பிள்ளைகள் கிறிஸ்துவின் சத்தியத்தில் வளர்க்கப்படவும் ஜெபிப்போம் .
நவம்பர் 7 பாபுவா பணித்தளத்தின் ஜெம்ஸ் செயல் மையத்தில் விசுவாசிகளுக்காக நடத்தப்பட்ட குடும்பக் கூடுகையில் 265 தம்பதியினர் பங்கேற்றனர்; சகோ. ரூபன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சகோதரி ஜெயந்தி ஆகியோர் தேவ செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். பணித்தளங்களில், கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டோர், உடன்படிக்கையின் மூலமாக தங்கள் விசுவாசத்தை சபைக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! பணித்தளங்களில் நடைபெறும் சுவிசேஷ ஊழியங்களுக்காகவும் மற்றும் வாலிபர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
நவம்பர் 8 போஜ்புரி-2 கோட்டத்தின் அனைத்து ஊழியர்களுக்கான மூன்று நாட்கள் உபவாச ஜெபம், செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2 வரை நடைபெற்றது. ஊழியர்கள் குடும்பமாக கலந்துகொண்டு ஜெபத்திலும், சுயபரிசோதனையிலும் தங்கள் நேரத்தைச் செலவிட ஏற்ற தருணமாக அமைந்தது. உத்திரப்பிரதேசத்தில் ஊழியத்திற்கு உண்டாயிருக்கும் தடைகள் நீங்கவும், விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்துநிற்கவும் ஜெபிப்போம்.
நவம்பர் 9 கோடாரி பணித்தளத்தில் சமுதாய மையக் கட்டிடத்தினைப் புதுப்பிக்க கர்த்தர் கிருபை செய்தார். இப்பணித்தளத்தில், செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும் மற்றும் கட்டப்பட்டுவரும் ஊழியர் இல்லத்திற்காகவும் ஜெபிப்போம்.
நவம்பர் 10 சசராம் பணித்தளத்தில் கட்டப்பட்டுவரும் ஜெம்ஸ் செயல்மையக் கட்டிடத்தின் பணிகள் எவ்விதத் தடையுமின்றி குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டிமுடிக்கப்படவும், பெலாவன் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகள் இடையூறின்றி தொடர்ந்து நடைபெறவும் மற்றும் வரும் நாட்களில் பணித்தளங்களில் திட்டமிடப்பட்டிருக்கும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.






