மேற்கு மண்டலம்

* பணித்தளங்களில் நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஆசிரியர் பயிற்சி வகுப்புகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். ஏப்ரல் 19 அன்று போஜ்புரி-1 கோட்டத்திலும் மற்றும் ஏப்ரல் 30 அன்று போஜ்புரி-2 கோட்டத்திலும் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளில் 75 பேர் கலந்துகொண்டனர்.
* போஜ்புரி -2 கோட்டத்தின் சூர்யபுரா பணித்தளத்தில் நடைபெற்ற வட்டாரப் பெண்களுக்கான சிறப்புக் கூடுகையில் 120 பெண்கள் பங்கேற்றனர். இக்கூடுகையில், சகோதரி ஜெயந்தி கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, போஜ்புரி-1 கோட்டத்தின் பாபுவா பணித்தளத்தில் நடைபெற்ற பெண்களுக்கான கூடுகையில் 150 பெண்கள் பங்கேற்றனர்; Dr. லீனா மற்றும் Dr. பிரீனா ஆகியோர் இக்கூடுகையின்போது கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, வாழ்க்கைக்கடுத்த ஆலோசனைகளையும் வழங்கி, ஜெபத்தில் வழிநடத்தினர். பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் இக்கூடுகைகள் ஆவிக்குரிய விதத்திலும் மற்றும் வாழ்க்கைக்கேற்ற வழிகாட்டுதல்களிலும் ஆசீர்வாதமாக அமைந்தன.
* தியோஹலியா பணித்தளத்தில் நடைபெற்ற சுத்திகரிப்புக் கூட்டத்தில் மொகனியா பணித்தளத்தைச் சுற்றியுள்ள பல்வேறு சபைகளைச் சேர்ந்த 200 விசுவாசிகள் பங்கேற்று ஆசீர்வதிக்கப்பட்டனர்; சகோ. வின்சென்ட் ஜெயராஜ் இக்கூட்டத்தில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றவர்களுக்காக ஜெபித்தார். பாதங்கழுவுதல் மற்றும் கர்த்தருடைய பந்தியுடன் கூட்டம் நிறைவுற்றது. ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும், சுத்திகரிப்புக்கும் மற்றும் உன்னத நிலையினை நோக்கிய பயணத்திற்கும் இக்கூடுகை உதவிபுரிந்தது.
* Rahab மற்றும் Our People Project இல்லப் பிள்ளைகளுக்கு உள்ளாடைகள், காலணிகள் மற்றும் பள்ளிப் பைகளை வழங்க கர்த்தர் உதவிசெய்தார்.
* போஜ்புரி -1 மற்றும் போஜ்புரி -2 கோட்டங்களில், கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள், கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் விசுவாசத்தை உடன்படிக்கையின் மூலமாக உடன் விசுவாசிகளுக்கும் மற்றும் சபைக்கும் வெளிப்படுத்தினர்.
* சசராம் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகளுக்காகவும், பெலாவன் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவும், பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியர்களுக்காகவும் மற்றும் உத்திரப்பிரதேசம் ஊழியங்களில் உண்டாயிருக்கும் தடைகள் நீங்கவும், எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம்.