July 2025

                                                            மேற்கு மண்டலம்



ஜுலை 07 துர்க்காவதி ஜெம்ஸ் செயல்மையத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான வாலிபர் கூட்டத்தில் பல்வேறு பணித்தளங்களைச் சேர்ந்த 75 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். பாடல்கள் மற்றும் ஆராதனையினைத் தொடர்ந்து, சகோ. வெண்ணிலவன் தேவ செய்தியைப் பகிர்ந்துகொண்டார். வாலிபத்தில் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயிப்பதைக் குறித்தும், வருங்காலத்தில் வாழ்க்கையை வடிவமைப்பதைக் குறித்தும் வழிகாட்டப்பட்டது. இக்கூட்டங்களில் பங்கேற்ற வாலிபர்கள் பணித்தளங்களில் தொடர்ந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக வாழவும், வாழ்க்கையில் அவரை வெளிப்படுத்தவும் ஜெபிப்போம். 

ஜுலை 08 ஜுன் 14 அன்று ராம்கட் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூடுகையில் பல்வேறு பணித்தளங்களைச் சேர்ந்த 70 பெண்கள் கலந்துகொண்டு ஆசீர்வதிக்கப்பட்டனர். சகோதரி மாலினி வின்சென்ட் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். இக்கூடுகையில் கலந்துகொண்ட பெண்களுக்காகவும், குடும்பங்களில் அவர்கள் கிறிஸ்துவை பிரதிபலிக்கும் தீபங்களாகத் திகழவும் ஜெபிப்போம். 

ஜுலை 09 பணித்தளங்களில் நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களின் மூலமாக, போஜ்புரி-1 கோட்டத்தின் 17 இடங்களில் 1320 சிறுவரையும், போஜ்புரி-2 கோட்டத்தின் 23 இடங்களில் 1470 சிறுவரையும், தொடர்ந்து, 4 ஜெம்ஸ் காப்பகங்களின் 280 பிள்ளைகளையும் மற்றும் பாபுவா ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியின் 700 மாணவர்களையும் சந்தித்து கிறிஸ்துவின் அன்பிற்குள் அவர்களை வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். விடுமுறை வேதாகமப் பள்ளியில் கலந்துகொண்ட பிள்ளைகள், கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்கவும் மற்றும் தங்கள் குடும்பத்திற்கு விளக்காக மாறவும் ஜெபிப்போம். 

ஜுலை 10 பணித்தளங்களில், இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மீதான தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர். பெலாவன் பணித்தளத்தில் ஜெம்ஸ் சமுதாய மையக் கட்டுமானப் பணியினைத் தொடங்க உதவிசெய்த தேவனுக்கு ஸ்தோத்திரம். இப்பணிகள் வரும் நாட்களில் தடையின்றி நடைபெறவும், இப்பணித்தள மற்றும் சுற்றியுள்ள மக்கள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். 

ஜுலை 11 சசராம் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் செயல்மையக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி நடைபெறவும், உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ஊழியத்திற்கு உண்டாயிருக்கும் எதிர்ப்புகள் மாறவும், அங்குள்ள விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் நிலைத்திருக்கவும் ஜெபிப்போம்.