மார்ச் 6 : பிப்ரவரி 7 அன்று போஜ்புரி – 2 கோட்டத்தில் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டத்தில் 1000 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்; சகோ. பால் பேன்ஸ் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினார். பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் இக்கூடுகை ஆசீர்வாதமாக அமைந்தது. இக்கூடுகையின்போது, நடைபெற்ற சிறுவர் முகாமில் 300 சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர். ஜெம்ஸ் சிறுவர் துறை ஊழியர்கள் சகோ. பகவான் மற்றும் சகோ உமேஸ் ஆகியோர், பாடல்கள், வேதவசனங்கள் மற்றும் பல்வேறு நிழ்ச்சிகள் மூலமாக சிறுவர்களை கிறிஸ்துவின் அன்பிற்கு நேராக வழிநடத்தினர். விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரவும், பணித்தள வாலிபர் கிறிஸ்துவை கண்டுகொள்ளவும் ஜெபிப்போம்.
மார்ச் 7 : மொகனியா, சக்கியா, ராம்கட், பஹ்வான்பூர் மற்றும் பெலாவன் பணித்தளங்களில் நடைபெற்ற ஊழியர்களுக்கான சிறப்புக் கூடுகைகளில் பணித்தள ஊழியர்கள் கலந்துகொண்டு, பணித்தள ஊழியங்களுக்காக ஜெபித்ததுடன், வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் சுவிசேஷப் பணிகளுக்காகவும் திட்டமிட கர்த்தர் உதவிசெய்தார். பெலாவன் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி நடைபெறவும், எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம்.
மார்ச் 8 : சசராம் பணித்தளத்தில் கட்டப்பட்டுவரும் ஜெம்ஸ் சமுதாயப் பராமரிப்பு மையத்தின் மேற்கூரைப் பணிகள் நிறைவடைய கர்த்தர் உதவிசெய்தார்; தொடர்ந்து கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி நடைபெறவும், விரைவில் இங்கு ஆலய ஆராதனை தொடங்கப்படவும் ஜெபிப்போம்.
மார்ச் 9 : துர்காவதி பணித்தளத்தின் ஜெம்ஸ் செயல் மையத்தில் தொடங்கப்பட்டுள்ள சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளில் பத்து சகோதரர்கள் இணைந்து பயிற்சிபெற்றுவருகின்றனர். இவர்கள் தேவ அன்பில் பெலப்படவும், வேதத்தை அறிந்துகொள்ளவும், பயிற்சியினைத் தொடர்ந்து இவர்கள் செய்யவிருக்கும் ஆத்தும ஆதாயப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.
மார்ச் 10 : துர்க்காவதி மற்றும் ராம்கட் பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் வட்டாரக் கன்வென்ஷன் கூட்டங்களுக்காகவும், மேற்கு மண்டலத்தில் செயல்பட்டுவரும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களுக்காகவும், பணித்தளங்களில் நடைபெற்றுவரும் பின்தொடர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
