August 2026

 

ஆகஸ்ட் - 7 பக்சடா பணித்தளத்தில் நீண்ட நாட்களாக சேதமடைந்திருந்த சபையின் கூரை மற்றும் ஜன்னல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. போஜ்புரி -1 மற்றும் போஜ்புரி -2 கோட்டங்களில், பணித்தளங்களைச் சுற்றியுள்ள 9 கிராமங்களில் நடைபெற்ற பல்வேறு சிறுவர் நிகழ்ச்சியின் மூலமாகசுமார் 700 சிறுவர் சிறுமியருக்கு பாடல்கள்வேதாகம கதைகள், வசனங்கள் மற்றும் விளையாட்டுகள் மூலம் கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது. இச்சிறுவர்கள் இயேசுவைக் கண்டு கொள்ளவும், அவர்களது குடும்பத்தினர் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் - 8 இசியா பணித்தளத்தில் இதுவரை சிறிய குடிசையில் சபைக் கூட்டங்கள் நடைபெற்றுவந்தன. தற்போது ஒரு விசுவாசியின் நிலத்தில் சிறிய கூடாரம் அமைக்க விசுவாசிகள் தாமாக முன்வந்துள்ளனர். கட்டுமானப் பணிகளும் தொடங்கியுள்ளன. போஜ்புரி -1 கோட்டத்தில் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட வேத வினா போட்டியில் சுமார் 300 பேரும், போஜ்புரி -2 கோட்டத்தில், 1 ரூ 2 தீமோத்தேயு மற்றும் தீத்து ஆகிய நிருபங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட வேத வினா போட்டியில் சுமார் 700 பேரும் பங்கேற்றனர். பணித்தளங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய வேத வினா போட்டியில் விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்துகொள்ளவும், வேத அறிவில் விசுவாசிகள் வளரவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் - 9 டும்ராவன் பணித்தளத்தில் நடைபெற்ற ஆண்கள் கூடுகையில் 40 பேர் பங்கேற்றனர். ஆண்கள் சபையின் தூண்களாக நிலைத்திருக்கவேண்டியதன் அவசியம் குறித்தும், சபை, குடும்பம் மற்றும் சமுதாயத்தில் ஆண்களின் பொறுப்புகள் குறித்தும் போதனைகள் வழங்கப்பட்டதுடன், அனைவரும் ஒன்றிணைந்து ஒருமனதுடன் ஜெபத்தில் நேரம் செலவிடவும் இக்கூடுகை வழிவகுத்தது. பணித்தள ஊழியங்களில் ஆண்கள் உற்சாகமாக பங்கேற்கவும், தங்கள் குடும்பம் மற்றும் உறவினரை கிறிஸ்துவண்டை வழி நடத்துவதுடன் சமுதாயத்திற்கும் முன்மாதிரிகளாக விளங்கவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் - 10 போஜ்புரி -1 கோட்டத்தின் ராம்கட் மற்றும் சோன்ஹன் பணித்தளங்களில் நடைபெற்ற வட்டார ஊழியர் கூடுகையைக் கர்த்தர் ஆசீர்வதித்தார். ஊழியர்கள் இணைந்து பணித்தளங்களில் வரும் நாட்களில் செய்யப்படவிருக்கும் ஊழியங்களைக் குறித்து திட்டமிடவும், ஆலோசிக்கவும், ஜெபிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மும்பையில் சிகிச்சை பெற்றுவரும் பகத்கஞ்ச் பணித்தள ஊழியர் சகோதரர் சத்யேந்திராவின் மனைவி சகோதரி ரிங்கி குமாரிக்காகவும், முதுகுத்தண்டின் நரம்புகளில் பாதிக்கப்பட்டுள்ள ஆலம்பூர் பணித்தள ஊழியர் சகோதரர் அருணின் மனைவி சகோதரி வித்யாவிற்காகவும், வலிப்பு வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரர் தீபக்கின் மகள் அட்லைனுக்காகவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் - 11 2026 ஜூன் 29 அன்று துர்காவதி பணித்தளத்தில் முதல் பயிற்சி அணியினரின் சான்றளிப்பு சிறப்பாக நடைபெற்றது. தங்கள் ஆறு மாதப் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவுசெய்த 9 இளைஞர்கள் சான்றிதழ்களைப் பெற்றனர். இவர்களில் 5 பேர் கர்த்தருடைய ஊழியத்திற்கென்று தங்களை அர்ப்பணித்துஜெம்ஸ் திமோத்தேயு வேதாகமக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள், உடன்படிக்கையின் மூலம் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்;. தேவனுக்கே மகிமை! சசராம் மற்றும் பெலாவன் பணித்தளங்களில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்காக ஜெபிப்போம்.