SEPTEMBER 2026

 


செப் 06 போஜ்புரி - 2 கோட்டத்தில் நடைபெற்ற ஊழியர்களுக்கான சிறப்புக் கூடுகையில், பணித்தள ஊழியர்கள் பங்கேற்றனர். பணித்தள ஊழியங்கள் குறித்து விரிவாக ஆராயவும், எதிர்காலத்தில் செய்யப்படவிருக்கும் ஊழியங்களைக் குறித்து ஜெபத்துடன் திட்டமிடவும் கர்த்தர் கிருபைசெய்தார். இக்கூடுகையில், சகோதரர் வின்சென்ட் ஜெயராஜ் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். திருவிருந்துடன் கூடுகை நிறைவுற்றது. 

செப் 07 போஜ்புரி - 1 கோட்டத்தில் நடைபெற்ற வட்டார ஊழியர் கூடுகையில், ஊழியங்களின் வளர்ச்சி மற்றும் புதிய முயற்சிகள் மற்றும் மிஷனரிகளின் நலன்கள் குறித்து ஜெபிக்கவும், திட்டமிடவும், அத்துடன், ஊழியர்களின் குடும்பங்களுக்காக ஜெபிக்கவும் கர்த்தர் கிருபை செய்தார். பக்சாடா பணித்தளத்தில் ஆலயத்தின் கூரை மற்றும் ஜன்னல்களைப் புதுப்பிக்கும் பணிகளைச் செய்துமுடிக்க கர்த்தர் உதவிசெய்தார். மீதமுள்ள பழுதுபார்க்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படவும், இப்பணித்தள ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், ஆத்துமாக்கள் சபையில் பெருகவும் ஜெபிப்போம்.  

செப் 08 மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, இதுவரை 7 முறை கீமோதெரபி சிகிச்சை பெற்றுள்ள பகத்கஞ்ச் பணித்தள ஊழியர் சத்யேந்தரின் மனைவி சகோதரி ரிங்கி குமாரிக்கு தேவன் சுகம் கொடுக்கவும், நீண்ட நாட்களாக நரம்பு பிரச்சனையினால் பாதிக்கப்பட்டு தற்போது CMC  மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் நௌகார் பணித்தள ஊழியர் சகோ. ராமாவத்-ஐ கர்த்தர் தொட்டு குணமாக்கவும், பல்வேறு மருந்துகளை எடுத்தும் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரர் தீபக்-ன் மகள் அட்லின் விரைவில் குணமடையவும் ஜெபிப்போம். 

செப் 09 சசராம் மற்றும் பெலாவன் பணித்தளங்களில் ஆலயக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. பணிகள் திட்டமிடப்பட்டுள்ள காலத்திற்குள் முடிக்கப்படவும், மழையினால் வேலைகள் பாதிக்கப்படாதிருக்கவும், விரைவில் ஆலயம் கட்டப்பட்டு ஜனங்கள் விடுதலையோடு ஆண்டவரை ஆராதிக்கவும் ஜெபிப்போம். 

செப் 10 பணித்தளத்தில் புதிதாக கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள், உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மீதுள்ள தங்கள் விசுவாசத்தை சபைக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! இசியா பணித்தளத்தில் சிறிய குடிசையில் நடைபெற்றுவந்த ஆலய ஆராதனையில் பங்கேற்கும் விசுவாசிகள், தாங்களாக முன்வந்து விசுவாசி ஒருவரின் நிலத்தில்  தற்காலிகமாக கூடாரம் ஒன்றை அமைத்துவருகின்றனர். விரைவில் இப்பணித்தளத்தில் ஆலயம் கட்டப்பட ஜெபிப்போம்.